இதுதொடர்பாக நேற்று இரவு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 222 மற்றும் உட்பிரிவு (1) வழங்கும் அதிகாரத்தின் மூலம், இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக பணி இடமாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி வன்முறை தொடர்பான வழக்கில் எஸ். முரளிதர் அடங்கிய அமர்வு வழங்கிய அதிரடி உத்தரவே தற்போது இவர் பணி இடமாற்றம் செய்யப்படுவதற்கான காரணம் என்று பல்வேறு தரப்பினர் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், கடந்த 12ஆம் தேதியே முரளிதரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் - ஹரியாணா உயர்நீதிமன்றத்திற்கு பணி இடமாற்றம் செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்ததில், இதுவரை காவல்துறையினர் உள்பட 27 பேர் உயிரிழந்துள்ளனர்.