பாகிஸ்தானில் வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த 1 லட்சம் வாத்துகளை அனுப்பும் சீனா

ஒரு வாத்து ஒரு நாளைக்கு 200 வெட்டுக்கிளிகளை உண்ணும் என்றும், வெட்டுக் கிளிகளை அழிப்பதற்கு தெளிக்கப்படும் பூச்சி மருந்தைக் காட்டிலும் இது பயனுள்ள முறை என்றும் சீன வேளாண் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.


கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு லோகஸ்ட் வெட்டுக் கிளிகளின் படையெடுப்பு மோசமானதாக இருப்பதாகக் கூறி, இதனை அவசர நிலை என்று இம்மாதத் தொடக்கத்தில் அறிவித்தது பாகிஸ்தான்.


கோடிக் கணக்கான வெட்டுக்கிளிகள் ஒரே நேரத்தில் படையெடுத்து வந்து கிழக்கு ஆப்பிரிக்காவிலும் பயிர்களை நாசம் செய்து வருகின்றன.


இந்தப் பிரச்சனையை குறிப்பான முறையில் எதிர்கொண்டு சமாளிப்பதற்கான திட்டங்களை உருவாக்க வல்லுநர் குழு ஒன்றை பாகிஸ்தான் அனுப்புவதாக இந்த வாரம் அறிவித்தது சீனா.


ஷெஜியாங் வேளாண் அறிவியல் அகாடமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் லு லிஷி, வெட்டுக்கிளிகளை அழிப்பதற்கான உயிரி ஆயுதங்கள்தான் இந்த வாத்துகள் என்று குறிப்பிட்டார்.